×

அதிரடியாக 124 ரன் விளாசினார் பட்லர் ஐதராபாத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் அபார வெற்றி

புதுடெல்லி: ஐதராபாத் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 55 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச முடிவு செய்தார். அந்த அணியில் வார்னர் இடம் பெறவில்லை. தவே, சுசித், கவுல் ஆகியோருக்கு பதிலாக முகமது நபி, புவனேஷ்வர், சமத் சேர்க்கப்பட்டனர். ராஜஸ்தான் அணியில் ஜெய்தேவ் உனத்காட், ஷிவம் துபேவுக்கு பதிலாக கார்த்திக் தியாகி, அனுஜ் ராவத் இடம் பெற்றனர்.ஜாஸ் பட்லர், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் ராஜஸ்தான் இன்னிங்சை தொடங்கினர். ஜெய்ஸ்வால் 12 ரன் எடுத்து ரஷித் சுழலில் எல்பிடபுள்யு ஆனார். அடுத்து பட்லருடன் கேப்டன் சஞ்சு சாம்சன் இணைந்தார். ஐதராபாத் பந்துவீச்சை பதம் பார்த்த இருவரும், 2வது விக்கெட்டுக்கு 150 ரன் சேர்த்து அசத்தினர். சாம்சன் 48 ரன் (33 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி விஜய் ஷங்கர் பந்துவீச்சில் அப்துல் சமத் வசம் பிடிபட்டார். அதிரடியாக விளையாடிய பட்லர் 56 பந்தில் சதம் விளாசினார். அவர் 124 ரன் (64 பந்து, 11 பவுண்டரி, 8 சிக்சர்) எடுத்து சந்தீப் ஷர்மா பந்துவீச்சில் கிளீன் போல்டானார். ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 220 ரன் குவித்தது. ரியான் பராக் 15 ரன், டேவிட் மில்லர் 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஐதராபாத் பந்துவீச்சில் சந்தீப், ரஷித், ஷங்கர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 221 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. மணிஷ் பாண்டே, ஜானி பேர்ஸ்டோ இருவரும் துரத்தலை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 6 ஓவரில் 57 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தது. மணிஷ் 31 ரன் (20 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து முஸ்டாபிசுர் வேகத்தில் ஸ்டம்புகள் சிதற வெளியேறினார். பேர்ஸ்டோ 30 ரன் (21 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து திவாதியா பந்துவீச்சில் அனுஜ் ராவத் வசம் பிடிபட்டார். விஜய் ஷங்கர் 8 ரன் எடுத்து மோரிஸ் வேகத்தில் மில்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் கேன் வில்லியம்சன் 20 ரன், முகமது நபி 17, அப்துல் சமத் 10, கேதார் 19 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். ரஷித் கான் டக் அவுட்டானார். ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன் மட்டுமே எடுத்து 55 ரன் வித்தியாசத்தில் தோற்றது. புவனேஷ்வர் 14 ரன், சந்தீப் ஷர்மா 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் பந்துவீச்சில் முஸ்டாபிசுர், மோரிஸ் தலா 3 விக்கெட், தியாகி, திவாதியா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பட்லர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ராஜஸ்தான் 2 புள்ளிகள் தட்டிச் சென்றது. …

The post அதிரடியாக 124 ரன் விளாசினார் பட்லர் ஐதராபாத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : Buttler ,Rajasthan ,Hyderabad ,New Delhi ,IPL league ,Rajasthan Royals ,Arun ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய...